நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கவுண்டம்பாளையத்தில் சாலையில் நடந்துச் சென்றவர்களை வெறிநாய் துரத்தி துரத்தி கடித்ததில் குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டுவது, துரத்தி கடிப்பது உள்ளிட்டவற்றில் நாய்கள் ஈடுபட்டு வருகின்றன. சில நேரங்களில் நாய்கள் கடித்து உயிரிழப்பும் நடந்து வருகின்றன. குழந்தைகளை கூட நாய்கள் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்து 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று திடீரென சாலையில் செல்பவர்களை கடிக்க ஆரம்பித்தது. சிலரை துரத்திச் சென்று கடித்தது. இதனால், பொதுமக்கள் அலறி அடித்தப்படி நாலாபுறம் சிதறி ஓடினர். இதைப்பார்த்து அங்கு வந்த பொதுமக்கள், கற்களால் நாயை விரட்டி நாய்கடியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில், காயமடைந்த குழந்தை ஒன்று, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இதுபோல் தெருக்களில் சுற்றிவரும் நாய்களை ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும், இதுபோன்ற நடக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+ There are no comments
Add yours