மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட பின்னர் திருச்சி – கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முகாமிலிருந்து விடுவித்து சுதந்திரமாக நடமாட அனுமதிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார். இவர்கள் 32 ஆண்டு சிறை வாசத்துக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு இருவரும் திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களை கொட்டப்பட்டு அகதிகள் முகாமிலிருந்து தவிடுவிக்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1991 ஜூன் 10-ல் கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில் 11.11.2022-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப் பட்டேன். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கிறேன். இந்த அகதிகள் முகாம் சிறையை விட மோசமானது. அறையை விட்ட வெளியே வரவும், மற்ற கைதிகளுடன் பழகவும் அனுமதிப்பதில்லை. அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்ட நாளிலிருந்து சூரியனை பார்க்க முடியவில்லை.
சிறையிலிருந்து விடுதலையான பிறகும் அதேநிலை தொடர்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். முகமில் இருந்து விடுதலை செய்யக் கோரி முகாம் அதிகாரிகளிடம் கேட்டபோது இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். என்னை இலங்கைக்கு அனுப்புவது மரண தண்டனைக்கு ஈடானது. இலங்கைக்கு நாங்கள் சென்றால் கண்டிப்பாக கொலை செய்யப்படுவோம். எனவே, நான் இலங்கை செல்ல விரும்பவில்லை. என் மனைவி, மகன், சகோதரி ஆகியோர் நெதர்லாந்தில் வசித்து வருகின்றனர்.
என் மனைவியும், மகனும் எனது அன்பை பெற்றதில்லை. என்னை முகாமிலிருந்து விடுவித்தால் நெதர்லாந்தில் என் குடும்பத்துடன் எஞ்சியிருக்கும் வாழ்நாளை முடிப்பேன். தற்போது முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் என்னால் நெதர்லாந்து செல்வதற்கு உரிய அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. இதனால், என்னை கொட்டப்பட்டு முகாமிலிருந்து விடுவித்து, ஓர் ஆண்டு சுதந்திரமாக இருக்க அனுமதித்து, நெதர்லாந்து அல்லது வேறு நாட்டுக்குச் செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், “என்னை முகாமிலிருந்து விடுதலை செய்து சென்னையில் தனது குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் ராபர்ட் பயஸ் வழக்கில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, மத்திய அரசு நவம்பர் 27-க்குள் பதிலளிக்கவும், ஜெயக்குமார் வழக்கில் தமிழக அரசு நவம்பர் 21-க்குள் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours