அமைச்சர் செந்தில் பாலாஜி 3வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது வருகிற 12ம் தீர்ப்பு அளிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைப் பிறகு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனால் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. பண பரிமாற்ற வழக்கில் தனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.
செந்தில் பாலாஜியின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்தநிலையில், இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று காலை விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வருவதற்காக விசாரணையை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது கோபமடைந்த நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீர்கள் என்று அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினார்.
இதன் பின்னர் வழக்கில் அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநில காவல்துறை ஒரு நாளைக்கு 120 ஜாமீன் வழக்கில் பதில் தாக்கல் செய்யும் நிலையில், ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கூறும் காரணம் ஏற்கும் படியில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.இதனையடுத்து வழக்கில் இரு தரப்பினரும் வாதங்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி அல்லி, இன்று ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். பின்னர் இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் 12-ம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours