சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தற்கொலைக்கு முயற்சித்து அனுமதிக்கப்பட்ட பாதிப் பெண்கள் 25 வயதுக்கு குறைவானவர்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஸ்டான்லி மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறை சார்பில் “பெண்களின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள்” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் வெளியான தகவல்:
“அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரை 5 மாதத்தில் மட்டும் 170 பெண்கள் தற்கொலைக்கு முயற்சித்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், 79 பெண்கள் 25 வயதுக்கும் குறைவானவர்கள்.
அவர்களில் 73 பேர் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை முடித்துள்ளனர். 17 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வி அறிவு இல்லாதவர்கள்.
மேலும், 99 பெண்கள் வேலையில்லாமல் வீட்டில் இருப்பவர்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
குறிப்பாக, தற்கொலை முயற்சித்தவர்களின் 65% பெண்கள் திருமணமானவர்கள், 27% திருமணம் செய்யாத பெண்கள்.
கணவரை பிரிந்து வாழும் 4 பெண்களும், 4 விதவைகளும் ஆவர்.
இவர்களின் 148 பேர் தனிக் குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். 92 பேர் நகரப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
தற்கொலை செய்து கொண்டு இறக்கும் பெண்களில் 47 சதவிகிதம் பேர் 18 முதல் 25 வயதுடைய பெண்கள் ஆவர். 26-35 வயதுவரை 24% பெண்கள், 36-45 வயதுவரை 19% பெண்கள், 46-55 வயதுவரை 7% பெண்கள், 56-65 வயது வரை 3% பெண்கள் தற்கொலை செய்துள்ளனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக தற்கொலை பதிவான மாநிலங்களின் பட்டியலில் 2018 முதல் 2021 வரை தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2021-இல் சென்னை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
2015 முதல் 2018 வரையிலான தரவுகளை பார்க்கும் போது கடைசி 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மனநிலை தடுமாற்றம் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக 25 வயதுக்கு குறைவான பெண்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
+ There are no comments
Add yours