ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள் (மார்ச் 31) கொண்டாடப்படுகிறது. அதேபோல் புனித வெள்ளி இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூரில் இருந்து, நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06057) அதே நாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து அதே நாட்களில் மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு சென்னை- எழும்பூர் வரும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்:06058) அதே நாளில் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல் ஈஸ்டரை முன்னிட்டு தாம்பரம் – நாகர்கோவில் இடையே அதிவிரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அதன்படி வண்டி எண்:06053 தாம்பரம்- நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் நாகர்கோவிலை மறுநாள் காலை 10.50 மணிக்கு சென்றடையும்.
அதேபோல் நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 06054) நாகர்கோவிலிலிருந்து இன்றும், நாளையும் மாலை 4.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வள்ளியூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours