தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் முடிவு செய்து அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது அந்த மனுவில், “எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், எங்களது மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
அவரது இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தனர்.
இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் “தமாகா சார்பில் சைக்கிள் சின்னம் கோரி அளித்திருந்த மனுவில் நிறைய பிழைகள் உள்ளது. அதனை சரி செய்து மீண்டும் அவர்கள் கோரும் பட்சத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அக்கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும்” என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழ் மாநில காங்கிரசின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிட்டு முடித்து வைத்தனர்.
+ There are no comments
Add yours