போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வந்த நிலையில், தற்போது பெய்துவரும் தொடர் மழையால் சம்பா சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இன்றுடன் நிறைவடையும் பயிர்க் காப்பீடுக்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்ள மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் 5.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சுமார் 9 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும். ஆனால், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுப்பதாலும், போதிய மழை இல்லாததாலும், மேட்டூர் அணையில் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. இதனால் பம்ப் செட் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள் மட்டுமே, சம்பா சாகுபடியை குறித்த காலத்தில் தொடங்கியுள்ளனர். அதன்படி, டெல்டா மாவட்டங்களில் இதுவரை 4 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீடு செய்ய தயக்கம்:சம்பா சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி(இன்று) கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். இதனால், பம்ப் செட் பாசனத்தை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் மட்டும் பயிர்க் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டினர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் சம்பா சாகுபடியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் பயிர்க் காப்பீடு செய்யவும் தற்போது முன்வந்துள்ளனர்.
இதற்கிடையே, சம்பா பருவத்தில் நடவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே அதற்கான சிட்டா அடங்கலை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கியுள்ளதால், அவர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிலும், நடவுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் காலதாமதமாக சாகுபடியில் ஈடுபட்டுள்ளதால், பயிர்க் காப்பீடு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours