தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஏடிஎஸ் என்ற அமைப்பை உருவாக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தன்னிச்சையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் தனிப்பிரிவு துவங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இது போன்ற சம்பவங்களின் போது தேசிய புலனாய்வு முகமை அல்லது சிபிஐ போன்ற அமைப்புகள் தான் தமிழ்நாட்டிற்கு வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
இதனால் ஏற்படும் காலதாமதம் மற்றும் மத்திய அரசின் அழுத்தங்கள் காரணமாக தமிழ்நாட்டிலேயே இதற்கென தனி அமைப்பு துவங்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து பலரை கைது செய்திருந்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை அருகே ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் வட மாநில தொழிலாளர் போர்வையில் வங்கதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக சிலர் ஊடுருவி இருப்பதும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தீவிரவாத தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்துடன் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். உளவுத்துறை ஏடிஜிபி மேற்பார்வையில் டிஐஜி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி இந்த குழுவுக்கு தலைமை வகிப்பார்.
அவருக்கு உறுதுணையாக நான்கு எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிகள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள் அடங்கிய 193 பேர் கொண்ட காவல் அமைப்பு தனியாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் காவல்துறையினருக்கு உதவுவதற்காக அமைச்சு பணியாளர்கள் 36 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர்களுக்கு புதிதாக 89 வாகனங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏடிஎஸ் எனப்படும் தீவிரவாத தடுப்பு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டில் அந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours