தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என்று, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த சத்ய பிரதா சாகு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்கு உள்ளே செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மத்திய தேர்தல் ஆணையத்தால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப சத்யபிரதா சாகு முடிவு செய்துள்ளார்.
இதனையொட்டி, அடையாள அட்டையை தனது உதவியாளர் சரவணன் என்பவர் மூலம் தபாலில் அனுப்புவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டதாக தெரிகிறது. அதன்படி, உதவியாளர் சரவணன் சத்யபிரதா சாகுவின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு தபால் நிலையத்துக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு அடையாள அட்டையை அவர் தவறவிட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, சத்யபிரதா சாகுவின் அடையாள அட்டை மாயமானது குறித்து, கோட்டை காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்
+ There are no comments
Add yours