கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ள நிலையில், அதற்கான உடன்படிக்கை பிப்ரவரி 28க்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலை சந்திக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை முடிந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
அதன்படி நேற்று (பிப். 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. அவற்றுள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மதிமுகவுடன் மட்டும் பேச்சு வார்த்தை நேற்று முடிவடையாமல் இழுபறியில் உள்ளது. இன்று (பிப். 25) மாலை 5.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தொடர்ந்து நாளை (பிப். 26) தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. நாளைக்குள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது
விரைவில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யத்திற்கான இடம் குறித்தும் காங்கிரஸிடம் பேசப்படும் எனத் தெரிகிறது. அதில் மக்கள் நீதி மய்யத்திற்கான இடம் ஒதுக்கப்படாவிட்டால் பிப்ரவரி 28 ம் தேதிக்குள் அதன் நிர்வாகிகளை அழைத்து திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 29-ம் தேதி கமல்ஹாசன் ‘தக் லைப்’ படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்கிறார். படப்பிடிப்பு முடிந்து மார்ச் 10-ம் தேதி தான் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார். அதனால் 28-ம் தேதிக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து விட்டு வெளிநாடு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours