பிரதமர் மோடிக்கு அண்ணாமலை வழங்கிய பரிசு

Spread the love

திருச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு, ஸ்ரீரங்கம் கோயில் குறித்து ‘தி இந்து’ குழுமம் வெளியிட்டுள்ள புத்தகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பரிசாக வழங்கினார்.

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.

அப்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் தொடர்பாக ‘தி இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸ்’ சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘SRIRANGAM – THE RESPLENDENT KINGDOM OF RANGARAJA’ என்ற புத்தகத்தை பிரதமருக்கு வழங்கி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

வண்ணமயமான புகைப்படங்கள்: ஸ்ரீரங்கம் கோயில் தொடர்பாக மூத்த எழுத்தாளர்கள் எழுதியுள்ள சிறப்பு கட்டுரைகள், பல்வேறு அரிய தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ‘தி இந்து’ ஆவணக் காப்பகத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மிக அரிய வண்ணமயமான புகைப்படங்களும் இந்த புத்தகத்தை அலங்கரிக்கின்றன. மொத்தம் 454 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், ஸ்ரீரங்கம் தொடர்பான தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் நுழைவுவாயில் ஸ்ரீரங்கம் ராஜகோபுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்ளே ஸ்ரீரங்கம் கோயிலின் பல்வேறு சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க வருகை தந்த பிரதமர் மோடிக்கு ‘தி இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸ்’ வெளியிட்ட ஸ்ரீரங்கம் கோயில் குறித்த புத்தகம் பரிசாக வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது என்று பாஜகவினர் பெருமிதம் தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours