திருவண்ணாமலை: திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அருகே கரியமங்கலத்தில் சுங்கச்சாவடி அமைக்க விவசாயிகளும், யாதவ மக்கள் இயக்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விவசாய நிலம், விவசாயிகள் நிறைந்தது திருவண்ணாமலை மாவட்டம். தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டம். பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பல ஆயிரம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், நகராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளை, விவசாய பெருங்குடி மக்கள், 90 சதவீதம் பயன்படுத்தி வருகின்றனர். கரும்பு, நெல், சிறுதானியங்கள், உளுந்து, காய்கனிகள், பூக்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து வகையான சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சாலைகளை தரமாக சீரமைத்து கொடுப்பதற்கு மாற்றாக, சுங்கச்சாவடிகள் மீது மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அடுத்தடுத்து சுங்கச்சாவடிகள் அமைக்கப் படுவது, வேளாண்மை பெருங்குடி மக்களை அதிர்ச்சியடைய செய்கிறது. திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் எதிர்த்தன. மத்திய அரசிடம் முறையிட்டும் பலனில்லை. இரண்டு சங்கச்சாவடிகளும் தொடர்ந்து இயங்குகின்றன. இந்நிலையில், திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது. இதற்கு, விவசாயிகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யாதவ மக்கள் இயக்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யாதவ மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கம் கு.ராஜாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணா மலை மாவட்டம் செங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கரியமங்கலத்தில் சுங்கச்சாவடி தொடங்க ஆரம்ப கட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்த மையத்தை திறக்கக் கூடாது. திண்டிவனம் – பெங்களூரு சாலை என்பது இரண்டு வழி சாலையாகவே உள்ளது. திண்டிவனம் முதல் ஊத்தங்கரை புறவழிச்சாலை வரை இரண்டு வழி சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி பெரும் விபத்துகளும் ஏற்படுகின்றன. செங்கம் அருகே கடந்த மாதம் மட்டும் நடைபெற்ற சாலை விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சரியான சாலை வசதி இல்லாததுதான் காரணம்.
சுங்க வரி கட்டணம் வசூல் செய்யும் அளவுக்கு திண்டிவனம் – திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. சுங்க வரி கட்டணம் வசூலிப்பதற்கான, அனைத்து விதிகளையும் முழுமையாக நிறைவேற்றிய பிறகு வசூல் மையத்தை அமைக்க வேண்டும். இதுபோன்ற விதிகள், இந்த சாலையில் காணமுடியாது. முழுக்க, முழுக்க மக்களை ஏமாற்றும் செயல். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் மற்றும் மகா தீபத்துக்கு வரும் பக்தர்களை குறி வைத்து வசூல் செய்யும் நோக்கத்தில், சுங்கச்சாவடி மையம் தொடங்கப்பட உள்ளது.
.
செங்கம் பகுதி முழுவதும் விவசாயம், விவசாயிகள் சார்ந்த கிராமங்களாகும். செங்கம் பகுதியில் விளையும் விளை பொருட்களை விற்பனை செய்ய, திருவண்ணாமலைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட தலைநகரில் இருந்துதான், வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு, சுங்க வரி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், விளை பொருட்கள் விலை உயரும். இது மக்களை நேரிடையாக பாதிக்கும். எவ்விதமான அடிப்படை வசதி இல்லாமல் செங்கம் அருகே கரியமங்கலத்தில் சுங்கச்சாவடியை தொடங்கக்கூடாது” என்றார்.
+ There are no comments
Add yours