குடவாசல் பேருந்து நிலையம் அருகிலுள்ள உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் முனியாண்டி விலாஸ் அசைவ உணவகம் உள்ளது. இதில் நேற்று முன்தினம் மதியம் கீழப்பாளையூர் பகுதியைச் சேர்ந்த வீரையன் (64), மஞ்சக்குடி முருகேசன் (50), மேல உத்தரங்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (60) ஆகிய மூவரும் மதிய உணவாக கோழி பிரியாணி சாப்பிட்டனர்.
அன்று இரவு அவர்களில் வீரையனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இடைவிடாத வயிற்றுப்போக்கு காரணமாக குடவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நினைவு தவறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக அவரை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அவரைப் போலவே அவருடன் பிரியாணி சாப்பிட்ட மற்ற இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர்களும் குடவாசல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் தேறினர்.
இது குறித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தி இறைச்சி மற்றும் உணவை மாதிரிக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் குடவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours