கனமழை காரணமாக சென்னை- தூத்துக்குடி இடையே நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை 3 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் துவங்கியது.
சென்னை- தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு இடையே தினசரி 3 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தென் மாவட்டங்களுக்கு மிக விரைவாக செல்ல இது ஏதுவாக இருந்தது. இந்நிலையில், தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் இடைவிடாமல் அதிகனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம், திருச்செந்தூரில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் சென்னை-தூத்துக்குடி-சென்னை இடையேயான விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. நேற்று மழை முற்றிலும் குறைந்த போதும், வானிலை முழுமையாக சீரடையாததால் 3வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விமான பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு வானிலை மற்றும் மழை நிலவரம் சீரானதை அடுத்து இன்று முதல் சென்னை-தூத்துக்குடி இடையே விமான சேவை மீண்டும் துவங்கியது. இதன்படி சென்னையிலிருந்து காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் இந்த சேவையை பயன்படுத்தி வந்த பயணிகள் ஆறுதல் அடைந்தனர்.
+ There are no comments
Add yours