தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு மே 18ம் தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. இதன்படி, இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது. ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஹென்றி திபேன் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தயாராகிவிட்டது. அடுத்த விசாரணையில் சமர்ப்பிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை ஏப்.25ம் தேதிக்குள் மனுதாரருக்கு அறிக்கையாக அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கை வரும் ஏப்ரல் 25ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
+ There are no comments
Add yours