தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 100 வீரர்கள் அடங்கிய குழு தென் மாவட்டங்களுக்கு விரைந்தது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. மேலும் தனியார் வானிலை ஆய்வாளர்களும், 30 முதல் 50 சென்டிமீட்டர் மழை வரை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளனர். குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 15க்கு மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் குழுவினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். வீரர்கள் 4 குழுக்களாக பிரிந்து, தலா 25 பேர் ஒரு குழு என தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இவர்கள் பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாமிரபரணி, குழித்துறையாறு உள்ளிட்ட ஆறுகளின் கரைகளில் வசிப்பவர்களும், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் வெளியேறும் கரையோரங்களில் உள்ளவர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours