துணைவேந்தர்கள் நியமனத்துக்கான தேடுதல் குழு அறிவிப்பாணைகளை திரும்பப் பெற்றுக்கொண்ட தமிழக ஆளுநர், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும், யுஜிசி விதிகளுக்கு உட்பட்டும் புதிய தேடுதல் குழுவை தமிழக அரசு விரைவில் அமைக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்காக 3 பேர் அடங்கியதேடுதல் குழுவை அமைத்து, கடந்த ஆண்டு செப்.6-ல் அறிவிப்பாணைகளை வெளியிட்டு இருந்தார்.
இதேபோல தமிழக அரசும் இந்த 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்காக தனி தேடுதல் குழுவை அமைத்து, 3 அறிவிப்பாணைகளை வெளியிட்டு இருந்தது. ஆனால், இந்த அறிவிப்பாணைகள் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிகளுக்கு உட்பட்டு அமைந்திருக்கவில்லை.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழு, யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு அமையவில்லை என்பதால், அந்தநியமனம் செல்லாது என சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேடுதல் குழு மூலமாக துணைவேந்தரை தேர்வு செய்திருப்பது சட்ட ரீதியாக ஏற்புடையதல்ல என்று தெரிவித்து, புதிய தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
யுஜிசி விதிகளின்படி… எனவே, தமிழக அரசும் அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில், 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு தொடர்பான முந்தைய அறிவிப்புகளை திரும்பப்பெற்று, யுஜிசி விதிகளின்படி புதிதாக தேடுதல் குழுவைஅமைத்து, பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும் என்று நம்புகிறேன்.
அதேபோல, 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்துக்காக ஆளுநர் சார்பில் அமைக்கப்பட்ட தேடுதல்குழு தொடர்பான 3 அறிவி்ப்பாணைகளும் திரும்பப் பெறப்படுகின்றன. தமிழக அரசும் தனது முந்தைய அறிவிப்பாணைகளை திரும்பப் பெற்றுக்கொண்டு, லட்சக்கணக்கான மாணவர்களின்உயர்கல்வி மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு புதிய தேடுதல் குழுவை விரைவில் அமைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours