தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்துள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், அவர்களது இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியாகியுள்ளது.
இந்த நிலையில், மழை பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் நலன் கருதி, அண்ணா, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யூ ஜி சி – நெட் தேர்வுகளை இன்று சென்னையில் பல மையங்களில் நடத்துவதற்கு சு.வெங்கடேசன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘ஒன்றிய அரசின் உயர் கல்வித்துறை யூ ஜி சி – நெட் தேர்வுகளை இன்று சென்னையில் பல மையங்களில் நடத்துகிறது. மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை ஒன்றிய கல்வித்துறை அறியாதா? தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours