கோவை: தொடர் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கோவை மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அது தவிர, வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நடப்பு பருவமழைக் காலத்தில் சிறுவாணி அணையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இது குறித்து சிறுவாணி அணைப் பிரிவு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும் போது, ‘‘அணையில் 45 அடி வரை நீர் தேக்க முடியும். நேற்று நீர்மட்டம் 30.21 அடியாக இருந்தது. 71.37 எம்.எல்.டி அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. தற்போதுள்ள நீர் இருப்பை கொண்டு வரும் பிப்ரவரி மாதம் வரை தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க முடியும்’’ என்றனர்.
+ There are no comments
Add yours