ஈரசெங்கல்லை தார்படுதாவைக் கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள். | இடம்: உடையாளூர்.
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர் மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், செங்கல் விலை உயர வாய்ப்புள்ளது என செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெண்ணாறு, வெட்டாறு, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் அதிகளவில் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது.
இத்தொழிலில் 1,000-க்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். மேலும், உற்பத்தி பாதிப்பால் செங்கல் விலையும் உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழிலில் ஈடுபடுள்ள கூலித் தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். சூளையில் கொளுத்திய செங்கல் மழையால் கருத்து வீணாகிவிட்டது. மேலும், படுகையில் மழைநீர் தேங்கி, வாகனங்களும் உள்ளே செல்ல முடியாததால், விற்பனைக்குத் தயாரான செங்கல்லையும் விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது ஒரு செங்கல் ரூ.6.60-க்கு விற்கப்படும் நிலையில், மழை தொடர்ந்து நீடித்தால் ரூ.2 விலை உயர்ந்து ரூ.8.60-க்கு விற்க வாய்ப்புள்ளது என்றனர்.
+ There are no comments
Add yours