சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
‘மிக்ஜாம்’ புயல் சென்னையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மிக்ஜம் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்காக சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தோற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது. ஏற்கனவே மழை – வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொற்று நோயும் பரவினால் அதை மக்களால் தாங்க முடியாது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இன்ஃபுளூயன்சா காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகின்றன. அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த நோய்களும் மழைக்கால தொற்று நோய்களும் சேர்ந்து கொண்டால், நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும். இந்த ஆபத்து வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்கிக் கிடந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சென்னையின் அனைத்துத் தெருக்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours