கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டது. 33 வார்டுகளில் திமுக 21, அதிமுக 6, பாமக 3, தேமுதிக 1, சுயேச்சைகள் 2 என உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 17 பெண் உறுப்பினர்களும், 16 ஆண் உறுப்பினர்களும் அடங்குவர். இதன் தலைவராக டாக்டர் சங்கவி முருகதாஸ், துணைத் தலைவராக ராணி, ஆணையராக பானுமதி ஆகியோர் உள்ளனர். டிச. 28-ம் தேதி நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. அதில் நகரில் மேற்கொள்ளப்படும் நலத்திட்ட வளர்ச்சிகள் குறித்த பொருட்கள் அடங்கிய தீர்மானங்களுக்கு உறுப்பினர்களின் விவாதத்துடன் ஒப்புதல் கோரும் நிகழ்ச்சிக்கு தலைவர் சங்கவி தலைமை தாங்கினார்.
அப்போது சில பெண் உறுப்பினர்கள் எழுந்து, தங்கள் வார்டில் உள்ள குறைபாடுகள் குறித்து பேச முயன்றபோது, வார்டு எண் 17-ஐ சேர்ந்த உறுப்பினர் குறுக்கிட்டார். அதற்கு அந்த பெண் உறுப்பினர், “இவ்வளவு நேரம் நீங்கள் பேசினீர்கள்!, பெண்கள் பேசும்போது ஏன் குறுக்கிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர் “எல்லாத்துக்கும் சேர்த்துதான் பேசுகிறேன்! நீங்கள்உட்காருங்கள்!” என்றார். பெண் உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்தும், அதை முடக்கும் வகையில் சில ஆண் உறுப்பினர்கள் கிண்டல் செய்வது ஏன்? என மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுபற்றி பேரிய 2-வது வார்டு கவுன்சிலர் கருணாநிதி, “நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேச தலைவர் வாய்ப்பளித்தும், அதை பயன்படுத்த முடியாத வகையில் சில மூத்த உறுப்பினர்கள் செயல்படுவது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு முறையும் கூட்டம் நடைபெறும்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை பேச விடாமல் செய்வது சரியல்ல.
ஒவ்வொருவருக்கும் உரிய நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்போது அதை பறிப்பதைப்போல் செயல்பட்டு வேடிக்கையாக பேசுவது வாடிக்கையாகி விட்டது. மக்களால் தேர்வு செய்து அனுப்பியிருக்கும் அவர்களின் குரலை சபையில் எதிரொலிக்க மறுப்பது நியாயமில்லை” என்றார்.
6-வது வார்டு உறுப்பினர் குமாரி கூறுகையில், “நகர்மன்றத்துக்கென கண்ணியம் உண்டு. அது இந்த மன்றத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. எனது வார்டு கருணாநிதி நகர் என்ற காரணத்தினாலேயே கடந்த ஆட்சியில் எனது வார்டுக்கு எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
இந்த ஆட்சியிலாவது அதை எடுத்துக் கூறலாம் என்றால், பேசத்தொடங்கிய உடனேயே கேலியும் கிண்டலோடும் சில ஆண் உறுப்பினர்கள் குறுக்கிடுவது வேதனையாக உள்ளது.
நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு சாலை வசதி உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பல கோரிக்கைகள் குறித்தும், நகர்மன்றக் கூட்டரங்கில் நகராட்சியில் செயல்படுத்தப்படும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு கிடைத்தும், நகர்மன்றக் கூட்டரங்கம் ஒரு அரட்டை அரங்கமாக மாறிவிடுகிறது. வரும் காலங்களிலாவது கூட்டத்தை கண்ணியத்தோடு நடத்த முன்வர வேண்டும்” என்றார்.
+ There are no comments
Add yours