எண்ணூரில் மிகப்பெரிய அம்மோனியா வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும் போது, “அரசாங்கம் தன்னை வாழ வேண்டும் என்று நினைக்கிறதா அல்லது சாக வேண்டும் என்று நினைக்கிறதா என அவர் கேள்வியெழுப்பினார்.
வட சென்னை கிட்டத்தட்ட ஒரு பேரிடரை சந்தித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வட சென்னையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. பெட்ரோல் தொழிற்சாலையில் இருந்து எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டதில் அங்குள்ள மக்களுக்கு கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து கடல் பகுதியை ஒட்டியிருந்த மக்கள், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கடலில் கறுப்பு படலமாக படிந்திருந்த எண்ணெய்யை வாளியில் மோண்டு அகற்றிய அவலமும் தற்போது நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த வாரம் அதே எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் இருந்து கடலுக்குள் பதிக்கப்பட்டிருந்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு அம்மோனியா வாயு கசிந்தது. இதனால் எண்ணூர் முழுவதும் அம்மோனியா வாயு பரவி அங்குள்ள மக்களுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடலே விஷம் போல மாறி ஏராளமான மீன்களும் செத்து மிதந்தன.
இதையடுத்து, இந்த கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி எண்ணூரை சேர்ந்த மக்கள் தொடர்ந்து 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சீமான் இன்று கலந்துகொண்டார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்க இங்க வாழ முடியல. வாழ்விடத்தை இழந்துட்டோம். வாழ்வாதாரத்தையும் இழந்துட்டோம். கடைசியாக உயிர் காற்றே நஞ்சாகி நாங்க செத்துட்டோம்னு வெச்சுக்கோங்க. அந்த தொழிற்சாலையை வெச்சு யாருக்கு வளர்ச்சியை கொடுக்க போறீங்க?
மக்களே இல்லாத போது யாருக்கான வளர்ச்சியை பற்றி நீங்க பேசுறீங்க? மக்களுடைய வளர்ச்சியா? இல்லைனா.. அந்த முதலாளியின் வளர்ச்சியா? கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது எங்களின் உறுதியான நிலைப்பாடு. ஒரு முதலாளியின் லாபத்துக்காக எங்கள் வாழ்விடத்தை விட்டு போக சொல்லி எங்களை நிர்பந்திப்பீங்களா நீங்க? நாங்க வாழணுமா சாகணுமா? நீங்க என்ன முடிவு பண்ண போறீங்க? இவ்வாறு சீமான் கேள்வியெழுப்பினார்.
+ There are no comments
Add yours