நீர் மேலாண்மை மற்றும் நீரின் தரம், பருவநிலை பின்னடைவுகள் மற்றும் நதிகளின் தூய்மைநிலை, நீர் பயன்பாட்டுத்திறன், நீர் சேமிப்பு, மக்கள் பங்கேற்பு ஆகிய 5 முக்கிய கருப்பொருள்களின் அடிப்படையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
மாநிலங்களின் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பாக மாநில நீர்வளத்துறை செயலாளர்களுடனான முதல் மாநாடு, கடந்த ஆண்டு ஜனவரி 5 மற்றும் 6-ந் தேதிகளில் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இதில் 22 பரிந்துரைகள் எடுத்துரைக்கப்பட்டன.
இவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், மேலும் பல ஆலோசனைகள் மேற்கொள்ளும் அடிப்படையிலும் மாநில நீர்வளத்துறை செயலாளர்களின் 2-வது மாநாடு 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 24-ந் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பல்வேறு மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு தொடர்பான நூல் ஒன்றும் இதில் வெளியிடப்படுகிறது.
மாநாட்டில் அமைச்சர்களுடன் துறை செயலாளர்கள், கூடுதல் தலைமைச்செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள், தொடர்புடைய பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.
+ There are no comments
Add yours