பங்காரு அடிகளார் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி கருவறை வரை சென்று பெண்கள் பூஜை செய்யவும், வழிபடவும் அனுமதித்து மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள். உலக அளவில் சக்தி வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. ஆன்மீக பணிகளோடு, பல சமூக நலப் பணிகளையும் சிறப்பாக ஆற்றிய பெருமைக்குரியவர் பங்காரு அடிகளார் அவர்கள். இவரது ஆன்மீகச் சேவையை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம ஸ்ரீ’ விருதினை இவருக்கு வழங்கியது. இந்திய நாடு ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியை இழந்துவிட்டது.
இவருடைய இழப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஆகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. திரு. பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளுக்கும், பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
+ There are no comments
Add yours