பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம், தேசிய பட்டியலின ஆணையத்திற்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
முரசொலி அறக்கட்டளை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. 1825 சதுர அடி கொண்ட இந்த நிலம் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அரசியல் காரணத்திற்காக தேசிய எஸ்.சி. எஸ்.டி ஆணையம் இந்த புகாரை நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குறிப்பிட்டார். ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், பஞ்சமி நிலமா இல்லையா என வருவாய்த்துறை தான் விசாரிக்க முடியுமே தவிர, தேசிய பட்டியலின ஆணையம் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேல்முறையீடு மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தேசிய பட்டியலின ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பட்டியலின ஆணையம், புகார்தாரர் ஆகியோர் பதிலளிக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டு மார்ச் 11ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
+ There are no comments
Add yours