பண்ணைக்குட்டையில் தவறி விழுந்த குட்டி யானை!

Spread the love

கோவை அருகே விவசாய பண்ணைக்குட்டையில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய காட்டு யானையை, வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி கிராமம் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம், ரேஷன் கடையை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை வெளியே எடுத்து சாப்பிட்டு சேதப்படுத்தியது. தொடர்ந்து கிராமத்திற்குள் படையெடுக்கும் யானைகளால் விவசாய பயிர்கள் சேதமாவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதனை தொடர்ந்து யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில யானைகள் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் கரடிமடை அருகே உள்ள மங்களப்பாளையம் கிராமத்தில் குமார் என்பவரது விவசாய தோட்டத்திற்குள் யானை கூட்டம் புகுந்துள்ளது. இந்த யானைகள் இன்று அதிகாலையில் தோட்டத்திலிருந்து வெளியேறி உள்ளது. எனினும் தோட்டத்திற்குள் யானை பிளிரும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

அங்கு சென்று பார்த்தபோது விவசாயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பண்ணை குட்டையில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது.

மதுக்கரை வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மதுக்கரை வனச்சரகர் சந்தியா தலைமையிலான வனத்துறையினர் அதிகாலை 4.30 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்து பண்ணை குட்டையில் சிக்கியிருந்த குட்டி யானையை ஜேசிபி உதவியுடன் மீட்டனர். தொடர்ந்து வனப்பகுதிக்குள் அந்த குட்டி யானை விரட்டப்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours