பிரதமர் நரேந்திர மோடி இன்று ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக கோவை வரும் நிலையில், தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, போலீஸார் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5:45 மணியளவில் கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி கோவையில் 5,000க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், கோவை மாநகர போலீஸார் உட்பட பல்வேறு பிரிவு போலீஸாரும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலையத்திற்குள் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, கோவை எருகம்பெனி பகுதியிலிருந்து ஆர்.எஸ்.புரம் வரையிலும் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக செல்ல உள்ளார். அவர் செல்லும் பாதையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, முழுமையாக போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள கோவை-திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் மூலம் போலீஸாருக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இதனால் பிற வகுப்புகளில் மாணவர்கள் யாரும் இல்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மெட்டல் டிடெக்டர்கள், மோப்ப நாய்கள் உள்ளிட்டவற்றுடன் பள்ளி வளாகம் முழுவதும் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில் எந்த விதமான மர்ம பொருட்களும் கிடைக்காததால், இது வதந்தி என்பது தெரியவந்தது.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி பெரும்பாலான பள்ளிகளுக்கும் இன்று மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பள்ளியில் தேர்வு முடிந்த பின்னர் வழக்கம் போல் பிற வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளியில் மர்ம பொருட்கள் இல்லாததால் மதியம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது.
போலீஸாரின் வருகை காரணமாக பள்ளி முன்பு பரபரப்பு நிலவியது. பிரதமர் வருகையின் போது பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours