காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை. தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3-ம் தேதி ராமேசுவரம், தங்கச்சிமடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய 2 நவீன மீன்பிடி படகுகள் நெடுந்தீவுக்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பாக் நீர் இணைப்பு பகுதியில் அடிக்கடி மீன்பிடிக்க செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், விலை உயர்ந்த மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை 69 பேர் கைது செய்யப்பட்டதோடு, கடந்த ஆண்டும் 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 மீனவர்கள் இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். மீனவ சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.
பாஜக அரசு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து சீரழித்து வருவதையும், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுக்காததையும் கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், வரும் 10-ம் தேதி ராமேசுவரம், பாம்பன் பேருந்து நிலையம் முன்பு, மீனவ அமைப்புகளை இணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
+ There are no comments
Add yours