முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயலும் (பிஎச்டி) மாணவர்கள் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முழு நேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-24-ம் கல்வி ஆண்டில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறுத்துவ, ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம், https://www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 அன்று மாலை 5:45 மணிக்குள், ”இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை 600005” என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வி ஆண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours