பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கிவைக்கிறார்.
வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அன்று இரவு சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தங்குகிறார்.
ராக்கெட் ஏவுதளம்: திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 28-ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக கோவை சூலூரில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். பின்னர், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி, வஉசி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
பாம்பன் பாலம்: மேலும், ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள ராமேசுவரம் பாம்பன் பாலம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். துறைமுகம் அருகே 2 இடங்களைத் தேர்வுசெய்து, அவற்றை சீரமைத்து வருகின்றனர். தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வுக்குப் பின்னர், ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறும். பின்னரே, பிரதமர் தொடங்கிவைக்கும் திட்டங்கள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும்.
+ There are no comments
Add yours