தமிழக மீனவர் மீது விரோதப் போக்கை பின்பற்றும் பிரதமரின் ராமேஸ்வரம் வருகையை கண்டித்து பாம்பன் பாலத்தில் கருப்பு பலூன்களை பறக்க விட்டு, காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு கடந்த 19ம் தேதி தமிழகம் வருகை தந்தார். நிகழ்வுகளை முடித்துக்கொண்டு, இன்று மதியம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதனிடையே ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி சார்பில் பாம்பனில் கருப்பு பலூன்கள் பறக்க விடும் போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் பாம்பன் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தெரிவிக்கையில்; “ 2022ம் ஆண்டில் தமிழக படகுகள் 36ம், 264 மீனவர்களும், 2023ம் ஆண்டில் 35 படகுகளும், 240 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கடந்த 2 வாரத்தில் தமிழக மீனவர்கள் 40 பேரை கைது செய்து இலங்கை யாழ் சிறையில் அடைத்தனர். 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது.” என்றார்.
மேலும், “கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட தமிழக படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து, அதில் 140 படகுகளை இலங்கை நீதிமன்றம் தனது நாட்டுடமையாக்கி உள்ளன. நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்களை பழைய இரும்பு கடைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இலங்கை கடற்படை சிறை பிடித்த தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு பலமுறை பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மீனவர் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவதே இல்லை. தமிழக மீனவர் பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி மாற்றான் தாய் மனப்போக்கில் தான் கையாள்கிறார். எனவே, பிரதமர் மோடியின் மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைமையில் அன்னை இந்திரா காந்தி பாம்பன் சாலைப் பாலத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மோடி திரும்பச் செல்ல வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், கருப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன”என்றார்.
மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2 ம் கட்ட யாத்திரையை அசாம் மாநிலத்தில் மேற்கொண்டுள்ள நிலையில் அவரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்களை பாஜகவினர் கிழித்து சேதப்படுத்தி, யாத்திரையில் கலந்து கொள்ள சென்ற சில வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
+ There are no comments
Add yours