பிரபல வசனகர்த்தா வேலுமணி காலமானார்!

Spread the love

நடிகர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பரவி வந்த செய்திகளைக் கேள்விப்பட்டு, விஜயகாந்த் படங்களின் ஆஸ்தான வசனகர்த்தா வேலுமணி அதிர்ச்சியில் காலமானார். பிரபல வசனகர்த்தா வேலுமணியின் திடீர் மறைவு விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது திரையுலகினரிடையேயும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும், யூ-ட்யூப் சேனல்களிலும் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல வதந்திகள் வலம் வரத் தொடங்கியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேப்டனுடன் இருக்கும் புகைப்படங்களை பிரேமலதா வெளியிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

விஜயகாந்த் நடித்த ’தேவன்’, ’எங்கள் ஆசான்’, ’விருதகிரி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் வேலுமணி. இவருக்கு வயது 55. கடலூரைச் சேர்ந்த வேலுமணி 30 ஆண்டுகளுக்கு முன்பே திரைத்துறைக்குள் நுழைந்து கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றியதோடு அவரின் ’மூன்றாம் உலகம்’ புத்தகம் உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் வஸந்தின் ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ’ரிதம்’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகவும் வேலுமணி பணியாற்றி உள்ளார். சினிமா மட்டும் அல்லாமல் விஜயகாந்த் அரசியல் சம்பந்தமாகவும், அரசியல் மேடைகளில் பேசுவது குறித்தும் வேலுமணியிடம் கலந்து ஆலோசிப்பதை வழக்கமாக வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகர் விஜயகாந்தின் அன்பை பெற்றவர், அவர் உடல் நலிவடைந்து ஒய்வில் இருந்த போதும் ஓரிருமுறை நேரில் சென்று சந்தித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக சந்திக்க கூட முடியவில்லை என்கிற ஏக்கதோடு இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை விஜயகாந்த் உடல்நிலை குறித்தான செய்திகளை கேட்டவர் மனமுடைந்து நேற்றிரவு சோர்வாக காணப்பட்டுள்ளார். பின்பு காலையில் அவர் உடல் நிலை சீரில்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மறைந்த வசனகர்த்தா வேலுமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு தங்கை, தம்பி மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours