தமிழகத்தில் புதிதாக பரவி வரும் கொரோனா தொற்று குறித்து யாரும் பதற்றம் அடைய தேவை இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று உலக நாடுகள் பலவற்றையும் சுமார் ஆறு மாதங்கள் வரை முடக்கிப் போட்டது. முதல் அலை. இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அலை அலையாய் பயமுறுத்திய கொரோனா, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதனால் தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதிய வகை தொற்று காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. நேற்று முன் தினம் ஒரே நாளில் கேரளத்தில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு தற்போது 1,100 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று 254 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புதிய வகை தொற்று 3 அல்லது 4 நாட்களில் சரியாகிவிடும். இதனால் பதற்றம் அடையத் தேவை இல்லை” என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours