புதுப்பொலிவுடன் மீண்டும் இயக்கப்படும் ‘குகன்’ படகு!

Spread the love

கன்னியாகுமரியில் கடலில் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் குகன் படகு, பழுதான நிலையில், ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை.

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது.

பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கும் வந்தது. இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் கடந்த 15-ம் தேதி மதியம் கடலில் இறக்கப்பட்டு, சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு, குகன் படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குகன் படகு இன்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours