பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் சர்வதேச பலூன் திருவிழாவை ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் பலூன் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகையை ஒட்டி இத்திருவிழா நடத்தப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டு ஜனவரி13(இன்று) முதல் வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உட்பட 8 நாடுகளில் இருந்து பலூன் ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில், தவளை, யானை, வாத்து என வித விதமான பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. கைதேர்ந்த அனுபவமிக்க விமானிகள் இந்த பலூன்களில் சுற்றுலா பயணிகளை இயற்கை சூழ்ந்த பொள்ளாச்சியின் அழகை காணும் வகையில் பலூனில் மிதந்தவாரு அழைத்துச் செல்வார்கள். வெப்பக்காற்று செலுத்தி பறக்கும் பலூனில் பயணம் செய்வது மிகவும் அலாதியானது.
தனியார் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் இத் திருவிழாவை காண கோவை ஈரோடு திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
நாளை முதல் கூடுதலான பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு நாட்களில் மொத்தம் 40,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours