மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறந்த பொருளாதார யுக்தி – கார்த்தி சிதம்பரம்!

Spread the love

“மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவர்களுக்கு பொருளாதாரமும், ஏழை எளிய மக்களின் கஷ்டமும் தெரியாது” என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் மாதந்தோறும் தகுதியுடைய பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை, பெண்களுக்கு போடும் பிச்சை என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பேசியது சர்ச்சையானது. தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் குஷ்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தத் தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. சமீபத்தில் கூட வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை குறித்து கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறந்த பொருளாதார யுக்தி என்று சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பாராட்டியுள்ளார். சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், “திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம், என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொருளாதார யுக்தி. இந்த திட்டத்தை பலர் கொச்சைப் படுத்துகிறார்கள். மேல்தட்டில் இருந்துக் கொண்டு இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் அவர்களுக்கு, ஆயிரம் ரூபாயின் அருமையும், ஏழைகளின் கஷ்டமும் தெரியாது. முக்கியமாக அவர்களுக்கு எந்த பொருளாதாரமும் தெரியாது.

தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதுபோல, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தால் உள்ளூர் பொருளாதாரம்தான் வளருகிறது. இந்த பணத்தை வைத்து மும்பைக்கு சென்று பங்கு வாங்கவோ, டெல்லி, லண்டன் சென்று செலவு செய்யவோ போவதில்லை. வீட்டைச் சுற்றியுள்ள கடைகளில்தான் செலவாகும். அதனால், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்துவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours