நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வரும் நிலையில், 2வது சீசன் துவங்கியுள்ளதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் துவங்கி மதியம் வரையிலும் கடும் மேகமூட்டம் நிலவுகிறது. அதன் பிறகு சில மணி நேரங்கள் மட்டுமே இயல்பான வானிலை நிலவுகிறது. இதனிடையே அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
நீலகிரிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரியில் பெய்து வரும் சாரல் மழையால், மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. தண்டவாளத்தில் மண், மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து விழுவதால் ரயில் சேவை பாதிக்கப்படுகிறது. நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி மலை ரயில் புறப்பட்ட நிலையில் ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே மண் சரிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பர்லியாறு ரயில் நிலையத்துடன் மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திரும்பியது. இதையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீராக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் பணிகள் முழுமையாக முடியாததால், இன்று 2வது நாளாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பணிகள் முழுமையாக நிறைவடையாததால் நாளையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours