மதுரை ஆட்சியரின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தடை!

Spread the love

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் மீது முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்ற மதுரை ஆட்சியரின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது.

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமண நீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்தள் பீய்ச்சி அடிப்பார்கள்.

பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசைத் திறன் கொண்ட பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், வேதி பொருள்களை கலந்து பீய்ச்சி அடிக்கிறார்கள்.

இதனால் கள்ளழகர், தங்கக் குதிரை, சுவாமியின் ஆபரணங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் திரவியம், வேதிப் பொருகள் கலந்த தண்ணீரால் பட்டாச்சாரியார்கள், பக்தர்கள், பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இனி பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அது போல் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க அனுமதிக்க வேண்டும். கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது’ என உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார்.

மதுரை ஆட்சியரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த ரஞ்சித் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கள்ளழகரின் சிலை, ஆபரணங்கள், குருக்கள் மீது தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சுவதை தடுக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதை எப்படி தடுக்க முடியும்’ என கேள்வி எழுப்பினர்.

மேலும், ‘மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் இதுவரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க அனுமதி பெற்றுள்ளனர். இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என்பதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனர்

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தார். சட்ட அலுவலர் அல்லது கோயில் நிர்வாகத்தினரிடம் ஆலோசனை செய்தாரா என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours