மனிதர்கள் சாக்கடைகளில் இறங்கும் நடைமுறை இன்னும் ஒழிக்கவில்லை – நீதிபதிகள்!

Spread the love

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நடைமுறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி பலியானவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கடந்த 2017 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நாடு சுதந்திரமடைந்து 46 ஆண்டுகளுக்குப் பின் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்த தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மனித தன்மையற்ற இந்த நடைமுறையை ஒழிக்க இந்த சட்டத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்த போதும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இன்னும் இந்த நடைமுறை அமலில் இருப்பதை ஒழிக்க முடியவில்லை. இந்த நடைமுறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், “பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தூய்மைப் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்க தடை விதிக்கும் 2013 ம் ஆண்டு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. படுகாயமடைந்தவர்களுக்கு காயத்துக்கு ஏற்ப 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்க வேண்டும். பலியாவோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும். இந்த உத்தரவுகளை அரசு முழுமையாக பின்பற்ற வேண்டும்” என்று வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours