முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில், பழனியில் முருக பக்தர்கள் மாநாடு, நிதி வசதியில்லாத கோயில்கள் திருப்பணிக்கு நிதி, அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அறநிலையத் துறை ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறை செயலர் க.மணிவாசன், அறநிலையத் துறையின் சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஆன்மீக பேச்சாளர்சுகி.சிவம், மு.பெ.சத்தியவேல் முருகனார், ந.ராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜுன சந்தான கிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி ஆகியோரும் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தூத்துக்குடி செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குமர குருபர சுவாமிகள், கவுமார மடம், அருள் நாகலிங்கம், மெய்யப்பன், வெற்றிவேல், அருள்நந்தி சிவம் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், அறநிலையத் துறை பதிப்பகப் பிரிவின் மூலம், 2-வது கட்டமாக, கோயில்களின் தல வரலாறு, தலபுராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள் என பழமையான நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 108 புத்தக விற்பனை மையங்களுடன், இந்தாண்டு புதிதாக 100 கோயில்களில் புத்தக விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. நிதி வசதியற்ற 500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முருகனுக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஒன்றுகூடி பல நிகழ்வுகளை மேற்கொள்ளவும், முருகனின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் உலக முருக பக்தர்கள் மாநாட்டை பழனியில் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வேளாக்குறிச்சி சத்யஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் கூறும்போது, ‘‘ நிதிவசதி இல்லாததிருக்கோயில்கள் திருப்பணிக்கென தனியாக நிதியம் ஏற்படுத்திமுதல்கட்டமாக 500 கோயில்களுக்கு ரூ.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், அர்ச்சகர், பணியாளர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக 100 குடியிருப்புகள் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அனைத்தும் நல்ல திட்டங்கள் என்பதால் அனைத்து ஆதீனங்களும் ஒப்புதல் அளித்தோம்’’ என்றார்.
சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறும்போது, ‘‘ கிராம கோயில்களுக்கு வைப்பு நிதி உயர்வு, கோயில்களில் ஆன்மீக நூல்கள் விற்பனை மையம், தமிழ்க்கடவுளான முருகனின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பழனியில் மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்களை ஆதரித்து ஒப்புதல் அளித்தோம்’’ என்றார்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறும்போது, ‘நூல் வெளியீடு, பல முக்கிய கோயில்களின் தல வரலாறுகளை எளிய முறையில் கொண்டு வரும் சிறந்த முயற்சியாகும். இதில் மின்வடிவம், புத்தகவடிவம் உள்ளது. மின்வடிவத்தில் வாசகர்கள் இலவசமாக படிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வலியுறுத்தியுள்ளோம். அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றார். இந்தாண்டு புதிதாக 100 கோயில்களில் புத்தக விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
+ There are no comments
Add yours