அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பி லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்ட உணவு பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓபிஎஸ் அணியில் உள்ள புகழேந்தி புகார் அளித்திருந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு புகார் அளித்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜர் மீதான முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில், காமராஜ் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் காமராஜர் மீதான முறைகேடு புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுகிறது. அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. 31 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும், அதாவது டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டியுள்ளது என நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன்பின், ரூ.350 கோடி முறைகேடு புகார் மீதான நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தர லஞ்சஒழிப்புத்துறை உத்தரவிட்டு, காமராஜ் மீதான புகார் குறித்த விசாரணையை நவம்பர் 15ம் தேதி ஒத்திவைத்தார் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா. பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours