மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை!

Spread the love

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது. மதுரை மாவட்ட நடுவர்மன்ற நீதித்துறை நீதிபதி முத்துலட்சுமி விடுதலை அளித்து தீர்ப்பளித்துள்ளார். இதன்மூலம் 13 ஆண்டுகால வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. குற்றம்சாட்டபட்ட 21 பேரில் 4 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி: கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் மதுரை மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரருமான மு.க.அழகிரி (அப்போது திமுகவில் இருந்தார்) மற்ற திமுக தொண்டர்களுடன் கூடி திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. அப்போது பணப்பட்டுவாடா நடந்ததாகவும், சம்பவ இடத்துக்கு வந்த மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மு.க.அழகிரி, அவருடைய ஆதரவாளரும், மதுரையின் முன்னாள் துணை மேயருமான மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் என மொத்தம் 21 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 9-ம் தேதி நடந்த விசாரணையில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

பிறழ்சாட்சியாக மாறிய தாசில்தார்:

வழக்கு விசாரணையின் போது, “மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை தாக்கவில்லை. பணப் பட்டுவாடா புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அப்போது கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதால் வாக்குவாதம் எழுந்து, மோதலாகியது” என்று தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட தாசில்தார் காளிமுத்து நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியாக மாறினார். அவரைத் தொடர்ந்து மற்ற சாட்சிகளும் பிறழ்சாட்சியாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours