உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர். அப்போது அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உதகை மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளது. உதகைக்கு தினமும் 1,300 வேன்கள் உள்பட 20,000 வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட இயலாது. சுற்றுச்சூழலும், வன விலங்குகளும் பாதிக்கப்படும். ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
மேலும், கரோனா கால கட்டத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை உதகை மற்றும் கொடைக்கானலில் மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.
இந்த இ–பாஸ் வழங்கும் முன்பு, வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம்? எத்தனை பேர் வருகின்றனர்? ஒரு நாள் சுற்றுலாவா? அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும். இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும். இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும். உதகையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
+ There are no comments
Add yours