சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த ராணுவ வீரர் கரூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்து தலை துண்டாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரது மகன் பாஸ்கர் (33), இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு மேலாக சத்தீஸ்கர் மாநில எல்லையில் பாதுகாப்பு பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து ஒரு மாத விடுப்பில் அவர் சொந்த ஊர் செல்வதற்காக நேற்று முன்தினம் சத்தீஸ்கரில் இருந்து ரயில் மூலம் கிளம்பினார். மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில், இன்று மதியம் கரூரை வந்தடைந்தது. அப்போது ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பாஸ்கர் கீழே இறங்கி சிறிது நேரம் நடைமேடையில் நின்றிருந்தார்.
மீண்டும் ரயில் கிளம்பிய போது பாஸ்கர் அதில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார். இதில் ரயில் அவர் மீது ஏறியதில், அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடிக்க உயிரிழந்தார். பாஸ்கர் தவறி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரது உயிரிழப்பு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்த ராணுவ வீரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours