ராமர் கோயிலை பார்த்ததில் மகிழ்ச்சி ..ரஜினிகாந்த் !

Spread the love

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ராமர் கோயிலை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிய அவர், இதுபற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும் எனக் கூறினார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. மிக கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். இதனை சுட்டிக்காட்டி அவர் மீது சிலர் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை வைத்து வந்தனர். ரஜினிகாந்த் பாஜக ஆதரவாளர் என்பதால் தான் அவர் ராமர் கோயிலுக்கு சென்றதாக அவர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு விட்டு சென்னைக்கு ரஜினிகாந்த் இன்று திரும்பினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்வியெழுபபினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “அயோத்தி ராமர் கோயிலை முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன் என்ற வகையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வு ஆன்மீகமா அரசியலா என பல பேர் கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை இது ஆன்மீகம் தான். ஒவ்வொருவரின் கருத்து ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். எல்லோருடைய கருத்தும் ஒரே மாதிரயாக இருக்கணும்னு அவசியம் கிடையாது” எனக் கூறினார்.

முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் உங்களுக்கு முன்னிருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக சர்ச்சை எழுந்ததாக கூறுகிறார்களே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த், “அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது” என பதிலளித்தார். அதேபோல, “ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் எந்த பூஜையும் நடக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டதாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த், “அப்படியா.. அதை பத்தி எனக்கு தெரியாது.. நான் கேள்விப்படல” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours