வடலூரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராடிய பொதுமக்கள் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இந்த சத்திய ஞான சபையில் ஏற்றப்படும் ஜோதியை தரிசிப்பதற்காக ஞான சபையை சுற்றியுள்ள 100 ஏக்கர் நிலங்களை மக்கள் தானமாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த இடத்தில் சர்வதேச மையம் ஒன்றை கட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சர்வதேச மையம் அமைப்பதற்கு கடந்த மாதம் பணிகள் துவங்கியது.
இதையடுத்து கட்டிடம் கட்டுவதற்கு இன்று பள்ளம் தோண்டப்பட்டது. இதை அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். தொடர்ந்து இந்த பள்ளத்தில் இறங்கி பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்திய ஞான சபை பெருவெளியில் இந்த மையம் அமைக்க கூடாது எனவும், அரசு இடத்தில் அமைக்கக் கோரியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தைப்பூச தினத்தன்று பல லட்சம் பேர் கூடும் இடத்தில் சர்வதேச மையம் மையம் அமைத்தால் பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
+ There are no comments
Add yours