‘வாகன சேவைக்கான முன்பதிவு செயலியை’ உருவாக்க..- அரசுக்கு சீமான் கோரிக்கை!!

Spread the love

வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களிலும் தானி மற்றும் மகிழுந்து வாகன சேவையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள தனியார் பெரு நிறுவனங்கள், பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதோடு, வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு உரிய தொகையினை அளிக்காமல் அதிக தரகுத் தொகையினை எடுத்துக்கொண்டு அவர்களின் உழைப்பினை சுரண்டி கொழுக்கின்றன. வாடகை வாகன சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாக தொழில் புரியும் தானி மற்றும் மகிழுந்து ஓட்டுநர்கள், வாடகை வாகன தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் எரிபொருள் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தானி மற்றும் மகிழுந்து வாடகை வாகனங்களுக்கான கட்டணம் எவ்வித மாறுதலும் இல்லாமல் பழைய கட்டண அளவிலேயே உள்ளதோடு பயணிகளிடம் அதிகமாக வசூலிக்கும் கட்டணத்தை தனியார் பெரு நிறுவனங்களே எடுத்துக்கொள்ளும் காரணத்தினால் வாடகை ஓட்டுநர்கள் போதிய வருமானம் இல்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் முறைப்படுத்தி பயணிகள் பாதிக்கப்படாமலும், ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு போராட்டத்தை வேடிக்கை மட்டுமே பார்ப்பது வாடகை வாகன ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.

•தானி மற்றும் மகிழுந்து சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான கட்டணத்தை முறைப்படுத்தி அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.
•வாடகை வாகன சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயம் சேவை மையம் தொடங்க உத்தரவிட வேண்டும்.
•பயணிகளுக்கு வழங்கப்படுவதுபோல வாகன ஓட்டுநர்களுக்கும் நிறுவனமே விபத்துக் காப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
•வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தனியாக நல வாரியம் அமைப்பதோடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் தனி சேவை மையம் அமைக்க வேண்டும்.
•நீண்டதூர வெளியூர் பயணம் செல்லும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு அனைத்து நகரங்களிலும் குறைந்த செலவில் குளியலறை மற்றும் ஒப்பனை அறையை தமிழ்நாடு அரசு அமைத்து தகர வேண்டும்.
•கேரள மாநில அரசு செய்துள்ளதுபோல அரசு சார்பில் குறைந்த பிடித்த தொகையில் ‘வாகன சேவைக்கான முன்பதிவு செயலியை’ உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாடகை வாகன சேவை புரியும் ஓட்டுநர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தங்களது வாழ்வாதார உரிமைக்காக வீதியில் இறங்கி போராடிவரும் ஓலா, ஓபர் உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்ல நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours