சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: “நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து வழிகளிலும் அதிமுக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. வேட்பாளர் தேர்வு எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதும், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
அதிமுக கட்சியானது சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. பாகுபாடு பார்ப்பதில்லை. யார் வேண்டுமானாலும் கோயிலுக்கு போகலாம். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எனக்கு கால் வலி இருக்கிறது. வாய்ப்பிருந்தால் கும்பாபிஷேகத்தில் நானும் கலந்து கொள்வேன்.
போக்குவரத்து தொழிலாளர்கள் குறைந்தபட்ச கோரிக்கையை மட்டுமாவது நிறைவேற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அதையும் அரசு நிராகரித்துவிட்டது. தொழிலாளர்கள் மீது அக்கறையில்லாதது திமுக அரசு. தமிழகத்தில் 22 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இருந்தன. அதில் 17 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 5 ஆயிரம் பேருந்துகள் பழுதடைந்துள்ளன. சென்னையில் 3,456 பேருந்துகள் இருந்த நிலையில், அதில் 2,600 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன.
சட்டப்பேரவை மானிய கோரிக்கையில், 500 மின்சாரப் பேருந்துகளும், 3,213 பிஎஸ்-6 ரக டீசல் பேருந்துகளும் வாங்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால், 3 ஆண்டுகளாகியும் ஒரு பேருந்து கூட வாங்கப்படவில்லை. பழுதடைந்த நிலையில் தான் பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிவகங்கை என்று நினைக்கிறேன், அங்கே ஒரு ஓட்டுநர் அரசுப் பேருந்தை இயக்க முடியவில்லை என்று கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திச் சென்றுவிட்டார்.
உலக முதலீட்டாளர் மாநாடு, விளம்பரத்துகாக நடத்தப்பட்டதோ என்று மக்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே, அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் என்றில்லாமல், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்” என்றார்.
+ There are no comments
Add yours