வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது கடந்த 22ஆம் தேதி செய்தது. மீனவர்கள் சென்ற இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் எப்போது இலங்கை கடற்படையினர் வருவார்களோ எப்போது கைது செய்வார்களோ என்ற அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.
மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், ஒன்றிய அரசு இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கி உள்ளது என்று கூறிய முதல்வர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இலங்கையில் காவலில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், “மீனவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் சாத்தியமாகும். அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தவிர்க்கப்பட வேண்டும்.
இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவை கூட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
+ There are no comments
Add yours